”அமெரிக்காவின் வேவு பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்” என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருக்கிறது.
உலக நாடுகள் அனைத்தையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர தொடர்ந்து முயற்சித்து வருகிறது அமெரிக்கா. அனைத்து நாடுகளின் உள்விவகாரங்களிலும் தலையிட்டு நாட்டாமை செய்கிறது. தனது மேலாதிக்கத்திற்கு ஒவ்வொரு நாட்டிலுள்ள உட்பூசல்களில் தலையிட்டு,தனது ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் பிரிவை நியாயப்படுத்தி அதற்கு அனைத்து உதவிகளையும் செய்து அந்த நாட்டின் மீது ஆதிக்கம் செய்கிறது.உலக மேலாதிக்கத்திற்கு மிக முக்கிய வர்த்தகங்களில் ஒன்றான எண்ணெய் வர்த்தகத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்க ஆளும் வர்க்கங்களும் எண்ணெய் பன்னாட்டு நிறுவனங்களும் தொடர்ந்து முயன்று வருகிறது. இப்படி தன்னுடைய சந்தைக்கும், உலக ஆதிக்கத்துக்கும் வாய்ப்புள்ள அனைத்து நாடுகளையும் உளவு பார்க்கிறது.
அப்படித்தான், தற்போது வந்துள்ள செய்தியும். உலக அரங்கில் தன்னுடைய எண்ணெய் மேலாதிக்கத்திற்கு தடையாக உள்ள நாடுகளான ஈரான், ஜோர்டானை தனது ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டுவர முயற்சிக்கிறது.ஏற்கெனவே சவுதி, ஆப்கான், ஈராக், லிபியா என்று பல மத்திய கிழக்கு நாடுகளை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்தப்பிறகும், மீதமிருக்கும் நாடுகளான ஈரானையும், ஜோர்டானையும் குறிவைத்து உளவு பார்க்கிறது. தன்னுடைய மத்திய கிழக்கு நாடுகளின் மீதான செல்வாக்கை கட்டிக்காப்பதற்கு அமெரிக்காவிற்கு பாகிஸ்தானும், எகிப்தும் தேவைப்படுகிறது. இந்த இரு நாடுகளும் தனக்கு சுற்றியுள்ள நாடுகளின் மீதான செல்வாக்கை ஏற்கெனவே பதித்திருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளாக இந்த இரு நாடுகளும் அமெரிக்காவின் ஏவல் நாய்களாக இருந்து, அமெரிக்காவின் கட்டளைக்கு சேவகம் புரிந்து வந்துள்ளது. இப்பொழுது இந்த இரு நாடுகளும் அமெரிக்க சேவகத்தால் மாபெரும் நெருக்கடிகளையும், உள்நாட்டு கிளர்ச்சிகளையும் எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்க ஆதிக்கத்தால் அந்த நாடுகளின் இறையாண்மை பரிபூரணமாக பறிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், அமெரிக்க ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டை முற்றிலுமாக சுரண்டப்பட்டுள்ளதை எதிர்த்தும், மக்கள் உள்நாட்டு கலகங்களில் நாள்தோறும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த கலகங்களையும், அதிருப்தியையும் பயன்படுத்தி தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் கிளர்ச்சிகளை உருவாக்கியும், கட்டுப்படுத்தியும் வருகிறது.இந்த கிளர்ச்சிகள் மூலம் மக்களிடம் அம்பலப்பட்டுப்போன தனது ஏவல் நாய்களை மாற்றி புதிய ஏவல் கூட்டத்தை ஆட்சியில் அமரவைக்கிறது.அப்படி புதிய ஏவல் நாய்களை உருவாக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்போது, மக்கள் போராட்டங்கள் பயங்கரவாதமாகவும், தீவிரவாதமாகவும் பிரச்சாரம் செய்து அதை ஒடுக்குகிறது. எப்படி இருப்பினும் அமெரிக்கா,தனது மேலாதிக்கத்திற்குள் வைத்துக்கொள்கிறது.
இந்த வரிசையில் இப்படி தனது சந்தைக்காகவும், ஆசியாவின் மீதான ஆதிக்கத்திற்கான இலக்காக இந்தியா இருப்பதை நாம் காண்கிறோம். இதைப்பற்றி இந்தியாவின் எந்த செய்தி ஊடகங்களிலும் எந்தச் செய்தியையும் காணவில்லை. செய்தி வெளியிட்ட இந்த செய்தி ஊடகமும் இதை ”அமெரிக்கா ஆர்வம் காட்டுவதாக” செய்தியை குறுக்குகிறது. இதையே சீனாவாகவோ அல்லது பாகிஸ்தானாகவோ இருந்தால் அனைத்து செய்தி ஊடகங்களும் மள்ளுக்கழைத்திருப்பார்கள். ஆனால் இப்போது கண்டும் காணாமல் இருப்பதர்கு காரணம் என்ன?
இந்திய ஆளும்வர்க்கங்களும், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டுள்வதே காரணம். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை ஏற்று சுற்றியுள்ள அனைத்து சிறு நாடுகளையும் அமெரிக்காவிற்கு சேவகம் செய்ய நிர்ப்பந்திக்கும் செல்வாக்கு மண்டல அரசாக இந்தியா இருக்கிறது. ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை அதிகப்படுத்த அதற்கு போட்டியாக உள்ள மற்ற பிரிவுடன் மோதுகிறது. அமெரிக்காவின் செல்வாக்கு சேவை செய்த நாடுகளான எகிப்திலும், பாகிஸ்தானிலும் இன்றைய நிலைமை என்ன என்பதை மக்கள் அனுபவத்தில் கண்டுணர்ந்துள்ளனர். அதனால் இந்தியாவிலும் தனது மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் ஆளும்வர்க்க கும்பல் அம்பலப்பட்டு நிற்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளதால், மிக நெருக்கமாக உளவுபார்த்து வருகிறது. இந்த உளவு பார்ப்பதின் மூலம் மக்களின் மனநிலையையும் ஆளும் வர்க்கத்தின் நிலையையும் அவதானித்து தனது அடுத்த நடவடிக்கையை முன்னதாகவே தீர்மானிக்க ஏதுவாகிறது. இந்த நெருக்கடியான தருணத்தில் இந்தியாவில் தனது பல்வேறு தொண்டு நிறுவனங்களின் மூலம் இந்திய மக்களின் அதிர்ப்தியை பயன்படுத்தி தனது தலைமையின் கீழ் கிளர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது.இதற்கு சமீபத்தில் நடக்கும் அன்னா அசாரே மற்றும் கேஜுருவால் தலைமையிலான போராட்டங்கள் சிறந்த உதாரணமாகும். இப்போதுள்ள இந்திய ஆளும்வர்க்கம் தனது மேலாதிக்கத்திற்கு சரியாக (Efficient) வேலை செய்யாதபோது அதற்கு மாற்றீடாக வேறொருவரையும் கொண்டுவருவதற்கு இவர்கள் உளவு செய்திகள் பயன்படுகின்றன.அமெரிக்க பொருளாதாரத்திற்கு சேவை செய்யாமல், மற்ற ஏகாதிபத்தியத்திற்கு போட்டி களமாக மாற்ற முயற்சிக்கும் போது அந்த அரசை எதிர்த்து தீவிர போராட்டங்களை தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சமீபத்தில் நடந்துவரும் கூடங்குள அணு உலைப்போராட்டம் ஒரு எடுத்துக்காட்டாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் அமெரிக்காவின் தொண்டு நிறுவனமான கிரீன் பீசின் (Green Peace) முன்னணியான உதயக்குமாரை வைத்து இப்போராட்டம் நடைபெறுகிறது.இந்திய பிரதமர் தனது அணு ஆதிக்கத்திற்கு (123 ஒப்பந்தப்படி) முழுமையாக ஒத்துழைக்காததை எதிர்த்து இப்போராட்டத்தை நடத்துகிறது.
தற்போது வந்துள்ள செய்திப்படி பார்த்தால், இந்தியா அமெரிக்காவின் அரசியல்-சமூக-பொருளாதார வேட்டையில் 5 வது இடத்தில் இருக்கிறது என்பதே உண்மை. இந்த உண்மையை இந்திய ஆளும்வர்க்கங்களும், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் மக்களிடம் திரைப்போட்டு மூட முயற்சிக்கிறார்கள் என்பதே உண்மை. இந்திய ஆளும் வர்க்கம் அமெரிக்காவை இந்தியாவின் நட்பு நாடாக காட்ட முயற்சிக்கிறது. ஆனால் அமெரிக்காவோ இந்தியாவை அடிமையாகத்தான் வைத்திருக்கிறது என்பதை நாளொரு வண்ணம் புதிய செய்திகள் அம்பலப்படுத்தி வந்துக்கொண்டிருக்கிறது. தனது அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் போட்டியாகவுள்ள சீனாவைவிட, இந்தியாவை உளவு பார்ப்பதில் முன் வரிசையில் வைத்துள்ளதில் இருந்தே இந்தியா அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எந்தளவு முக்கியம் என்பதை நாம் அவதானிக்க வேண்டும். சில்லறை வர்த்தகத்துறையில் அமெரிக்காவின் முதலீடு, 123 ஒப்பந்தம், இராணுவ ஒப்பந்தம் என்று அனைத்து பிரிவிலும் அமெரிக்காவின் வேட்டைக்காடாக இந்தியா இருந்துவருகிறது. இந்தியாவே தன்னுடைய வேட்டை காடாக இருப்பதுமட்டுமல்லாமல், இந்த ஆசிய பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளையும் அமெரிக்காவின் வேட்டைக்காடாக மாற்றுவதை இந்தியா அனுமதிக்கிறது. இதற்கு வங்கதேசம், பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் உதாரணமாக உள்ளன. இலங்கையில் இந்தியாவின் தலைமையில் போரை முன்னெடுத்த அமெரிக்க அரசே, போர்க்குற்றத்திற்கு நீதிக்காகவும் போராடுவதாக தன்னைக்காட்டிக்கொள்கிறது. இந்த உட்பூசல்களில் தலையிட்டு தனக்கான முழு எடுப்பிடி அரசாக இலங்கையை மாற்றுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமே ஒடுக்குபவனாகவும், ஒடுக்குதலை எதிர்த்து போராடுபவனாகவும் ஒரு அவல நிலையை மக்களிடம் ஏற்படுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறையிலிருந்து மக்களை காப்போம். தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களுக்காக போராடுவதைப்போல காட்டிக்கொள்ளும் துரோகிகளையும் அம்பலப்படுத்தி ஏகாதிபத்திய இரும்பு கரத்திலிருந்து மக்களை விடுவிப்போம்
அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்ப்போம்!
அமெரிக்காவின் தொண்டு நிறுவனங்களின் தலைமையிலான போராட்டங்களை அம்பலப்படுத்துவோம்!
மக்கள் விடுதலைக்காகவும், மக்களின் ஜனநாயக உரிமைக்காவும் போராடுவோம்!
ஒவ்வொரு நாட்டினது இறையாண்மையையும், அரசியல் விடுதலையையும் போற்றிப் பாதுக்காப்போம்!
நன்றி புதிய தலைமுறை